சுவாமி கங்காதரர் கண்ட காளி

பக்தர்கள் மிகவும் உரிமை பாராட்டி காளி ஆச்சியென்று அழைத்து வரும் திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் பிரத்தியட்ச சக்தி வாய்ந்த காளி பீடங்களில் முதன்மை வாய்ந்தது. இதன் அற்புதகரமான விக்கிர சைதன்ய சக்தியைப் பற்றி ஆண்டு தோறும் இவ்வாலத்தில் நடைபெற்று வரும் கௌரி விரத நோன்பின் முடிவில் 'காப்பு' (தேவியின் சைதன்ய சக்தியால் உருவேற்றப்பட்ட சிவப்பு நூல்) எடுக்கும் வைபவ தரிசனம் பெற்ற புண்ணியர்கள் உணர்ந்திருக்கின்றார்கள். தேவியின் அருட்சக்தி வாய்ந்த திருக்காப்பு எடுக்கும் வேளையில் அநேகாயிரம் பக்தர்கள் மெய் மறந்து நின்று வழிபடும் அபூர்வ காட்சி மனாதீதமானது.


காளி ஆச்சியென்றால் ஆஸ்திகர்களுக்கு மாத்திரமல்ல நாஸ்திகர்களுக்கும் உள்ளுரப் பயமும் பக்தியும் வரும். ஆலயமும் ஆலய கைங்கரியங்களும் எவ்விதம் நிர்வாகம் செய்யப்படவேண்டும் என்பதற்கு இவ்வாலய நடைமுறைகள் வழிகாட்டியாக இருக்கின்றன. நித்திய நைமித்திய பூஜைகள் விசேட காலங்களில் நடைபெறும் உற்சவங்கள் அருள் சுரக்கும் லட்சார்ச்சனைகள் ஆலயம் ஷீணதசையடையாமல் காலாகாலத்தில் செய்யப்பட்டு வரும் ஜீர்ணோத்தாரண திருப்பணிகளும் கும்பாபிஷேகம் முதலிய விஷேசட கிரியைகளும் ஆலய கைங்கரியங்களும் முறை தவறாமல் நடைபெற்று வருகின்றன. இது ஆலய பக்தர்களுக்கு மாத்திரமல்ல இந்து மத தர்மங்களுக்கே பேரும் புகழும் தரக் கூடியது


இந்து ஆலய தர்மங்களை சீரும் சிறப்புமாக அடக்கமாய் நின்று செயல் படுத்தி வரும் சக்தியந்தன் பிரம்மஸ்ரீ சு.கு.சோமஸ்கந்த குருக்கள் அவர்கள் தேவியின் சம்பூர்ண அனுக்கிரகம் பெற்றவராவர். அவருடைய ஆலய தர்மம் தவறாது நிர்வாகத் திறமை பக்தர்கள் அனைவருடைய பாராட்டுதலையும் பெற்றிருக்கிறது. அவருடைய இத்திருப்பணித் தொண்டு தொடர்ந்து நடைபெற்று வருவதற்கு பார்வதி பரமேஸ்வரர் கடாட்சம் என்றும் இருப்பதாக.


பல்லாண்டுகளாக திருகோணமலை மக்களுக்கு பல கால கட்டங்களில் நிகழ்ந்த பேராபத்துக்களில் இருந்தெல்லாம் பாதுகாத்து வளர்தெடுத்த தாயினும் சாலச் சிறந்;த நமது ஸ்ரீ பத்திரகாளி அம்மையின் அருள் மேலும் கண்ணை இமை காப்பது போல் நின்று அனைவரையும் பாதுகாத்து புருஷார்த்த தர்மங்களை அளித்து வாழவைப்பதாக.