தேர்ச் சிந்து

என்ன சிங்கார மெங்கள் ஈஸ்வரி தேரினில்

ஏறிவரும் பவனி பார் – தேரினில் (ஏறி)

இந்திர கௌரி ஏழ்வகை மாதர்கள்
சுந்தரமாகவே வந்து பணிந்திட (என்ன)

கன்னன் மொழிக் கிளியே அன்னபூரணியம்மா
கந்தனைத் தந்தநாயகி – என்னம்மணி - கந்தனைத் தந்தநாயகி
கற்றிடுமடியவர் புத்தியிலேயுறை
சிற்றிடை மாதுமை நற்தின மதனில் (என்ன)

சந்தனங் குங்குமம் ஜவ்வாது புனுகுடன்
தாழ்சடை நாகந் தூங்கவே – புனுகுடன்.
தாழ்சடை நாகந்தூங்கவே
சந்திர சூரியர் எண்டிசைப் பாலகர்
செந்திருவே யென வந்தனை செய்திட (என்ன)

வண்ணச் சிமிக்கியும் மருதாணிப் பதக்கமும்
வைடூரியத்தினோலையும் பதக்கமும் - வைடூரியத்தினோலையும்
வாய்ந்த பட்டாடையிற் சார்ந்த வொட்டியாணமும்
நேர்ந்த திருக்கரத் தேந்து பொற்கிளியும் (என்ன)

சித்திர ரதந்தனிலே தேவி எழுந்திடல்
செய்ய கண்காட்சி மாட்சியே – எழுந்திடல் -
செய்ய கண்காட்சி மாட்சியே
இத்திரு கோணையின் பத்தருக்கேயருள்
உத்தமி சாம்பவி சித்தமிரங்கியே (என்ன)

அற்புதக் காட்சியிது வல்லோ பிர்மானந்தம்
ஆனந்தம் நித்யானந்தம் - பிர்மானந்தம் -
ஆனந்தம் நித்யானந்தம்
ஆதரவுடனே பூதல வுயிர்க்கு
மாதமும்மரி பெய்தேதுயர் நீங்கிட (என்ன)

பாடி அம்மன் புகழை நாடி நயந்து நாம்
பாடித் துதித்து ஆடுவோம் - பாடுவோம் - கூடித்துதித்து ஆடுவோம்
பங்கயன் தங்கையை இங்கித நங்கையை
திங்களைத் தாங்கிய சங்கரன் மங்கையை. (என்ன)