பாதாதி கேசத் துதி
1) என்னரசி பெண்ணரசி எழிலார்ந்த மின்னரசி
எழுதாத மறையென்னு மோர்வேத நல்லரசி
பண்ணரசி பங்கயந் தன்னில் வீற்றிருக்கும் மறையவன்தன்
நாவரசி போற்றுமொரு நாதாந்தப் பொருளாகும்
விண்ணரசி விளையமொரு நற்கமலத் துறைந்ததிரு
பொன்னரசி போற்றிடும்மெய் அழகுநிறை வதனமுடைத்
தண்ணரசி திருக்கோண மலைநகரில் வாழுமெங்கள்
மென்னரசி பத்திரகாளி எனுமொரு பேரரசியே!.
2) சக்திவடி வேலனுக்கு கன்பு செய்து சூர்மாத்
தடியவோர் வேல்கொ டுத்தாய்
பக்தவரவர் பலவினை களைந்தெறிய ஞானமாம்
நின்னருட் பால்கொ டுத்தாய்
மிக்கபுகழ் வித்தகி நீயென்று போற்றிய
பேர்க்கெலாம் நல்வாழ் வளித்தாய்
பக்குவமாம் ஞானமெய்ச் சுடரே போற்றினேன்.
காத்தருளும் ஆதிபத்ர காளியே!.
3) மூத்தமக னென்றுன் மதலையைப்
பிள்ளையை யானைமுகக் கடவுளை
சேர்த்தணைத்து உச்சி மோந்துன்
மடிதனில் சேர்த்தவளே எந்தன்
ஆத்தாளே அம்மே அன்னையே
அடிபணிந் துன்பாதம் உளத்தே
சேர்த்தாலும் ஏற்க மறுப்பையோ
கருணையே வடிவான தாயே!.
4) வேதாகம வித்தகரும் தமிழ்ஞான பண்டிதரும்
போற்றி நின்னருள் பெற்றுய்ந்தார்
நாதாந்த தத்துவமெ நல்லதொரு மறைமுடிவே
நான்முகன் போற்றிடும் நாயகியே
வேதாந்த பொருளாகி வேதவடிவாய்
நாரணன் போற்றிடும் அருமருந்தாய்
பாதாதி கேசம்வரை பக்குவமாய்ப் பாடவருள்
திருக்கோண மலைவாழ் பத்திரகாளியே!
5) சங்கரன் நற்சாமவேதி சதாசிவன் பினாகபாணி
எங்கள் துயர் தீர்க்குமிறை உயருருத்திரன் பெருமகேசன்
கங்குல்பக வறக்காக்கும் நற்றிருமால் கோபாலன்
பங்கயத்துறைஇறை அணைவர்க்கும் மெலாம் நற்பொருளாகி
சங்கரிஉயர் சிவகௌரி மகேஸ்வரிபெரு மணோண்மணியெனு
முருத்திராணி திருநாரணி உயர்பிராம்மணி எனப்பெயர்கொள்
எங்கள் அபிராமி யுயர்திருபவாணி பராபரையே
பத்திரகாளியே சரணம்நின் மலர்;ச்சரணகமலங்களே!.
6) நின்பாத பங்கயம் பங்கயம் பற்றி நின்றார்
பாவம் பற்றா நின்றார்
என்னிதயத் தாமரை நினக்கின்றே
மலர்ந்தது உந்தன் எழிலார்
பொன்னைநிகர் பாத மலர்சேர்ப்பாய்
என்ன கத்தே என் அரசே
மன்னுபுகழ் திருவடி பணிந்தென்றும்
போற்றி;னன் போற்றி போற்றி!;
7) முரசறை யொலியென முழவதி ரொலியென
நிரைசால் கரிபல வருமெதி ரொலியென
நறை சேர் மலர் படு தும்பியி னொலியென
கறைநிறக் குயிலினம் பாடிட மொலியென
நிறைசேர் நாதப் பரவொலியிதுவென
முறைமுறை முழங்கும் திரையொலி போல் வரும்
மறையொலி யதிர்வென மந்திர வொலியாய்
சிலம்பொலி கேட்டேன் சிந்தையிற் சேர்த்தேன!;
8) துடியிடை துலங்கக் கண்டேன்
துரிய நல் லியல்பு கொண்டேன்
கொடியிடை அழகு கண்டேன்
மின்னிடை மிளிரக் கண்டன்
படிமிசை வடிவு கொண்டு
பக்தர்க் கிரங்கி வந்து
கடிதெனக் கருனை செய்யும்
காளிநின் வடிவம் கண்டேன!;
9) கலீர் கலீரென மேகலை யசைந்திட
பளீர் பளீரென மின்னொளி தோன்றிட
மெல்லெனவந் தென்னுளத் தெழுவாய்
உயர் ஞானச் சுடரே யமுதே
நல்லொதொரு பூரணை நிலவே
நம்பினவர் நலமே ;தவமே
வல்லதொரு பொருளே வளமார்
திருக்கோண மலைவாழ் இறையே!
10 தோள் கண்டேன் மார்பினில் மின்னிடும்
பொற்கபாடம் கண்டேன் பொன்னிகர்
தோளிடம்சேர் பூந்துகில் மிளிர
தொடைபலவும் பொலியக் கண்டேன்
வாளெனக் கண் மடவா ரணிந்திடும்
பொற்றாலியும் மரகதமாமணி
தாள்வடமாலை தொங்கிடும் அழகு
நான் செய்பெரும் தவத்தால் கண்டேன!;
11) கண்கவர் காட்சி கண்டேன்
கருத்தினிற் பதியக் கண்டேன்
விண்ணவர் வணங்கக் கண்டேன்
விரைந்தொன்று கூடக் கண்டேன்
பெண்ணவள் மார்பகத்தே
பொங்கிடும் வீரம் கண்டேன்
பண்புடன் வணங்கி நானும்
பாவைக் கடிமையானேன்
12) முத்து நிறை பொற்காப்புக் கண்டேன்
முழுநீலக் மணிக்காப்புக் கண்டேன்
பத்மநிறநற் பூடகமும் உத்தம
மரகதமணிச் சூடகமும் பொலிந்திடு
சித்திபலதரு தேவியவள் சூடிய
கங்கணமதை நானும் கண்டேன்
நித்தமருள் நீலியவள் நிமலனா
ரவர்பாகத் துறையுமே தனக்கே!
13) காதணி பொலியக் கண்டேன்
கண்ணொளி மிளிரக் கண்டேன்
போதொடு பொலிந்திடும் பூவை தன்
பூங்குழற் கருமை கண்டேன்
மாதவர் கண்டிடும் மகுடம்
மின்னிடும் வடிவு கண்டேன்
பாதமொடு கேசம்வரை நான்
தேவியைப் பாடிக் கண்டேன்;!.
14) சந்திர வதனம் கண்டேன்
மின்னிடும் நுதலும் கண்டேன்
மந்திர வடிவு கொண்டு
மங்கையென் முன்னே நிற்க
சிந்தூர நிறத்தை யொத்த
குங்குமம் பொலியக் கண்டேன்
வந்தனம் கூறியே வாழ்த்துவன்
பத்ர காளி யுன்னை!.
15) பொன்னிகர் மேனி தாணோ
பூவதன் மென்மை தாணோ
தண்ணிகர் குளிர்ந்த பார்வை
விண்மதி நிலவினோடும்
மென்னெனும் தென்ற லொடும்
சேர்த்து நான்பே சுதற்கு
விண்ணுடைத் தேவி நின்னை
இசைத்தனன் கவிகள் செப்பி!.
16) தோடுடைப பெம்மான் தனிப் பெருந் திருவே
தோடணி மலர்க் கொடியே நல்மடப் பிடியே
காடுடைச் சுடலைப் பொடிப பூசினார் பாகம்
கொண்ட தோர் பரம்பொருளே நடம்புரி மயிலே
ஏடுடை மலர்கொண்றேற் றிடுவார்க் கருளம்
எந்தையே என்னரசே எமக்கருள் இறைவியே
பீடுடைப் பெருந்திருவே பெருநிதி யேயென்
பத்ரகாளியெனுமோர் பொற்கொடி மலரே!.
17) பார்வதி பரமேஸ்வரி பராசக்தி பகவதி
கார்நிகர் கருணாகரி கௌரி உயர் பத்ரகாளி பதர காளி
பேர் புகழ் கங்கேஸ்வரி கௌமாரி துர்க்கா
பவாணி பெருந்திறலுடைப் பேச்சி பெருந் தேவி
சீர்நிறைச் செல்வி சிவையே காமாட்சி கவின்பெறு
காசி விசாலாட்சி மதுரை நகர் வாழுநற்
பார் புகழ் மீனாட்சி மகமாயி மணோன்மணி
மகேஸ்வரி சரணம்நின் ;சரணகலங்களே!.
19) உற்ற துணை நீயல்லால் உலகிற்றுணைவேறுண்டோ
உஜ்ஜயனி தன்னிவாழ் உயர் ஞானக் கனியே நீ
கற்றதொரு பொருளாகிக் காளி கொட்டத் தமாந்து
இராமகிட்ணர்க் கருள் செய்ததோh பெருந்தவமே; பராபரயே
மற்றெமக்கரு ளவென்றே இங்கற்றதொரு கோமளமே
இளங்குயிலே இன்னமுதே திருக்கோணமi வாழ்ந்திடுமோர்
கற்பகமே நற்தவமே பத்ரகாளியே என்னரசே
பொற்பாதம்நான் போற்றுகின்றேன் பொன்னரசே பூங்குயிலே!.
20) திருவிளங்கச் சீர் பொலியத் திருக்கோண
மலையென்றும் வாழியவே
அருளொளிசேர் அன்னையவள் திருநாமம்
என்றென்றும் வாழிய வாழியவே
பெருமைமிகு தமிழ் மொழியும்பரவிநாளும்
பாரெங்கும் வாழிய வாழியவே
அருமைமிகு உயிரினங்கள் அகிலமெங்கும்
அமைதியுடன் வாழிய வாழியவே!
( சந்திரசேகரம்பிள்ளை ஜெயச்சந்திரன் )