யுத்த கால நிகழ்வு

 

அது போர்க்காலம். இரண்டாவது யுத்தம் நிகழ்ந்த காலம். அதிகாலை ஐந்து மணிக்கு, எனது தந்தையார் நித்திரை விட்டு எழுந்ததும், தான் ஒரு கனவு கண்டதாகக் கூறினார். யுத்த முஸ்தீபு நடந்து கொண்டிருந்த காலமது என்பதால் காளித் தாய் கனவில் தனக்கு கட்டளை இட்டவாறு ஒழுக வேண்டும் என்று எனது தந்தையார் பிடிவாதமாக இருந்தார். அந்தக்காலத்தில் பயணத்துக்கு உபயோகப்படுவது மாட்டு வண்டில் தான். ஓரு மாட்டு வண்டில் வீட்டு வாயிலில் வந்து நின்றது. தந்தையார் விருப்பப்படி, எமது குடும்ப வண்டிலில் ஏறி அமர்ந்ததும், ;நாம் திருகோணமலை நகரை விட்டுப் புறப்பட்டுப் பயணமானோம்.


காட்டுப் பாதையுடாக எமது மாட்டு வண்டி செல்லும் போது இருமருங்கினையும் அவதானித்த தந்தையார், இது தான் நான் கனவில கண்ட பாதை என்று அடிக்கடி கூறியவாறு இருந்தார். தாயார் இது கேட்டு வியந்து போனார்.


அப்பாதை சென்றடைந்த இடம் பனம்கட்டிமுறிப்பு. இதுவே நாம் அன்று தஞ்சம் அடைந்த கிராமம். கிராமத்தை சுற்றும் முற்றும் பார்த்த எனது தந்தையார் புளகாங்கிதம் அடைந்தார். ' இதோ நான் கனவில் கண்ட ஊர்', என்று துள்ளிக் குதித்தார். நாம் பனம்;கட்டி முறிப்புக் கிராமம் சென்ற பதின்மூன்றாம் நாள், திருகோணமலை நகரில் யப்பானியர் குண்டு பொழிந்தனர். மக்கள் அல்லோல கல்லோலப் பட்டு அங்கலாய்த்தனர். இதனைத் தான் இறுதி நாட்கள் வரைக்கும் எனது தந்தையார் நினைவு கூறுவார்.

'அம்பாள் காட்டும் வழியே நடப்பின் அவள் எம்மைக் கைவிடாள்'...இப்படி அம்மா எமக்கு அறிவுரை கூறுவார்.
இது திருக்கோணமலை நகராண்மைக் கழக முன்னாள் உறுப்பினர் இராசையா சோமசுந்தரம் கூறும் அனுபவம்