மறக்கருணை


ஒரு காலத்தில் திருகோணமலை பத்திரகாளி கோயில் பூசகர் ஒருவர் பூசையினை முடித்துக் கொண்டு இரவு திருக் கதவைப் பூட்டித் தன்வீடு சென்று விட்டார். வீடு சென்ற பின்னர் தன் மகனைக் காணாது திகைத்துப்போனார் எங்கும் தேடியும் மகனை காணவில்லை. எனவே திரும்பி அவர் ஆலயம் சென்று மகனைத் தேடினார். மகன் ஆலயத்துள் இருப்பதை அறிந்தார்.

பூசை முடிந்து திருக்கதவை அடைத்த பின்னர் கதவைத் திறப்பது ஆகம விதிகளுக்கு முரணானது என்பதை உணர்ந்து மறுநாட் காலை வந்து மகனை அழைத்துச் செல்வதாக முடிவு செய்தார். ஆனால் மனைவியோ இதற்கு இசையவில்லை. புத்திர பாசத்தினால் உந்தப்பட்ட அவர் மனைவி உடனே மகனை அழைத்துச் செல்ல வேண்டும் என்று விடாப்பிடியாக நின்றாராம்.இதனால் அடைத்த திருக்கதவை அந்தணர் திறந்தார்.

திறந்தது தான் தாமதம் வைரவர் அப்பிள்ளையை இரண்டாகக் கிழித்துப் போடுவதைக் கண்டார். இப்படியும் ஓர் அற்புதம்!


இது இறைவியின் மறக்கருணையை எமக்கு நினைவூட்டுகிறது. புதல்வர்களைத் திருத்தப் பெற்றோர் கண்டிப்பதும்,சில வேளைகளில் தண்டிப்பதும் இயல்பன்றோ. ஆனால் அக்கண்டிப்புக்கு ஊடாக பரிவுணர்சியை நாம் காண்கிறோம் அல்லவா! அது போன்றதே இறைவியின் மறக்கருணையும். சிவஞான சித்தியாரில் உள்ள ஒரு பாடல் மறக்கருணையை எடுத்தியம்புகிறது.


தந்தைதாய் பெற்ற தத்தம்
புதல்வர்கள் தம்சொல் ஆற்றின்
வந்திடா விடின் உறுக்கி
வளாரினால் அடித்துத் தீய
பந்தமும் இடுவார், எல்லாம்
பார்த்திடின் பரிவே ஆகும்
இந்தநீர் முறைமை யன்றோ
ஈசனார் முனிவும் என்றும்