மதனுடை நோன்றாள்

ஓர் அழகான பெண் தன் கூந்தலை முடியாமல் விரித்தவாறு செருக்குடன் திருகோணமலை பத்திர காளி கோயில் முன்னே கடந்து சென்றாள். உடனே அவள் தலை ஒரு புறந் திரும்பி விட்டதுபல வைத்தியர்களை நாடினாள்.

பல வகையான மருந்துவம் செய்து பார்த்தாள். ஆனால் நோய் குணமடையவில்லை.

மிகவும் மன வேதனையுடன், தன் பிழை உணர்ந்து, இறைவியை நினைந்து நினைந்து கண்ணீர் உகுத்தவாறு நித்திரைக்கு சென்றாள்.


இறைவி அவள் முன்னே தோன்றினாள். 'நாளை சந்நிதிக்கு வா. அங்கே உனது முடியை நறுக்கி எனது சிரசுக்குத் தா. அப்போது உன் நோய் தீரும்', இப்படிக் கூறினாள் பத்திரகாளி. இதைக் கேட்ட அப்பெண் அதிகாலை எழுந்தாள். நீராடிப் பத்திரகாளி சந்நிதி சென்றாள்.

கூரிய கத்தரிக்கோலைக் கையில் எடுத்துச் சென்றாள். தனது கூந்தலை நறுக்கினாள். அம்பாளுக்கு ஈந்தாள். சாம்பிராணி வாடை எங்கும் பரவியது அப்பெண்ணின் நோயும் அகன்றது.