கோவில் வரலாறு

 

ஈழநாட்டிலுள்ள தேவாரப் பாடல் பெற்ற ஷேத்திரங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வர சிவ பூமியில் கோயில் கொண்டருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் ஈழத்திலுள்ள சக்தி பீடங்களில் தொன்மையும்,முதன்மையும்,மேன்மையும் உடையதாக விளங்குகின்றது.


மதுரையம்பதியில் பிறந்த பிராமண குலத்தைச் சேர்ந்த ஒருவர் இராமேஸ்வரத்துக்கு வந்து இல்லற வாழ்கையை நடாத்தி வந்தார். இவ்வாறு இருக்கும் காலத்தில் தெய்வ விக்கிரகம் ஒன்று பற்றி தெய்வீக வாக்கு அவருக்கு கிடைத்தது. திருகோணமலையிலுள்ள பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் தெற்கு வீதியில் தொங்கு செவ்வரத்தை மரமொன்று இருக்கின்றது. இந்த மரத்தின் அடியில் நிலத்தினுள் ஒரு தெய்;வ விக்கிரகம் இருக்கிறது என்ற தெய்வ வாக்கின்படி அந்தப் பிராமண பக்தர் திருக்கோணமலைக்கு வந்தார். அவ்விடத்தை அகழ்ந்து பார்த்த போது ஒரு செப்புக் கிடாரத்தினுள் (தாளி) காளி அம்பாளின் விக்கிரகம் இருப்பது கண்டறியப்பட்டது.


அன்று தொடக்கம் இன்றுவரை இக்கோவிலில் நடைபெறுகின்ற பிரதான விழாக்களில் இந்தக் காளியம்பாள் விக்கிரகம் சிறப்பிடம் பெற்று வருகின்றது. காளி அம்பாளின் விக்கிரகம் தாளியிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட காட்சி இக்கோவிலின் சித்திரத் தேரில் படைப்புச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். இராஜ கோபுரத்;திலும் இச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.


அகழ்ந்தெடுக்கப்பட்ட செப்புக் கிடாரமும் அதற்குள் வைத்துப் பாதுகாக்கப் பட்டிருந்த பத்திரகாளி அம்பாளின் விக்கிரகமும் இக்கோவிலின் தோற்றக்காலம் பற்றிய தரவுகள் சிலவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு உதவியாக இருக்கின்றன. செப்புக் கிடாரத்தின் வடிவமைப்பினையும் உலோக வார்ப்பு முறையினையும் அவதானிக்கையில் மிகப் பழமை வாய்ந்த தொன்றாகவே இக்கிடாரம் காணப்படுகின்றது. பத்திரகாளி அம்பாள் விக்கிரகத்தினுடைய வடிவமைப்பு ஏறத்தாழ 11ஆம் 12ஆம் நூற்றாண்டுகளில் தமிழக் கோவில்களில் காணப்பட்ட காளியம்மன் உருவங்களை ஒத்ததாக காணப்படுகின்றது. இவ்விக்கிரகத்தின் காலத்தை திட்டவட்டமாக கூறமுடியாவிட்டாலும் அது மிகப் பழமை வாய்ந்த தொன்றெனக் கூறிக்கொள்ள முடியும்.


இக்கோவில் பற்றிய கதை மரபில் வரும் செய்தி இலங்கையில் காலத்துக்குக் காலம் நடைபெற்ற போத்துக்கீச, ஒல்லாந்தப் படையெடுப்புக்களாலும் பௌத்த சமணத் தாக்கங்களாலும். இந்துக் கோவில்களுக் கேற்றப்பட்ட அழிவுகளை நினைவூட்டுகின்றன. அந்நியரின் ஆக்கிரமிப்பிலிருந்து தற்காலிகமாக பாதுகாத்துக் கொள்ளும் நோக்குடன் கோணேசர் கோவிலின் விக்கிரகங்கள் கிணற்றினுள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததையும் பொலநறுவை இந்துக் கோயில்களின் திருவுருவங்களை அதிசயிக்கத்தக்க வகையில் நிலத்தினடியில் கல்லறை அமைத்துப் பாதுகாத்து வைத்திருந்ததையும் அறிகின்றோம்.


இத்தகைய நடவடிக்கையாவே அந்நியரின் இந்து மத விரோதச் செயல்கள் நடைபெற்ற 17ம் நூற்றாண்டில் காளி கோயில் அம்மன் விக்கிரகமும் செப்புக் கிடாரத்தினுள் பாதுகாத்து வைத்து மண்ணுக்கடியில் மறைத்து வைக்கப்படிருந்ததென எண்ண வேண்டும்.


இன்று ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் கோவிலிருக்கும் இடத்தில் சோழர் காலக் கோவிலொன்று இருந்ததெனவும,; இக்கோவிலுக்குரிய தூண் ஒன்றில் கல்வெட்டொன்று காணப்பட்டதையும், அதனைப் பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி செ.குணசிங்கம் அவர்கள் ஆய்வு செய்துள்ளார் என்பதனையும் அறிவோம். போத்துக்கீசரின் தாக்கத்தினால் இக்கோவில் அழிக்கப்பட்டு இது மறுபடியும் இந்த இடத்தில் புனரமைக்கப்பட்டதெனக் கொள்ளலாம்.